headlines

img

மாலதி கவிதைகளில் புதுமொழியும் கருத்துக்களும்

மொழிக்கல்லில் முட்டி முட்டி  என் துயர் சொன்னேன்  அது என் நெஞ்சில் மோதி மோதி கவிதையாய் விழுந்தது”

மொழியை இசையாக,  அமுதாக, உயிராக, உறவாகக் கண்ட மரபுகளி லிருந்து முற்றிலும் விலகி நின்று,  கல்லாகக் காட்டியவர் கவிஞர் சதாரா மாலதி.  இவர் நெல்லை மாவட்டம் பிரம்ம தேசத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்தவர்.  மாலதி என்ற பெயரிலேயே இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தந்தவர். கவிதை வளர்ச்சிக் கட்டத்தில்  இரண்டு மாலதிகள் உருவாயினர்.  ஒருவர் இந்த மாலதி.  மற்றொருவர் மாலதி மைத்திரி.  பெயர் குழப்பத்தைத்  தவிர்க்க சதாரா மாலதி என்று இவர் புனைபெயர்  வைத்துக்கொண்டார். பிஎஸ்என்எல்  பணி நிமித்தமாக புனே அருகே உள்ள சதாரா சென்றதால் தனது பெயரோடு அதனை இணைத்துக்கொண்டார்.  

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு 57 ஆவது வயதில் அவரது கவிதைச் செயல்பாடு முடிந்து போனது.  சதாரா மாலதி மறைந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் நினைவு கூரப்படுவதற்கு வாழும் அவரது கவிதைகளே காரணம். ‘இலக்கிய வீதி’ இனியவன் முயற்சியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவோடு மயிலை பாரதிய வித்யா பவனில் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமையில் ‘நினைவில் வாழும் கவிஞர்கள்’ நிகழ்வு நடைபெறு கிறது.  இந்த வரிசையில் ஆகஸ்ட் மாத நிகழ்வு கவிஞர் சதாரா மாலதிக்கு உரியதாயிற்று.  புதுவையைச் சேர்ந்த பேராசிரியர் பா. ரவிக்குமார் கவிஞரின் நினைவுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்தினார்.  இதனூடாக மறக்கப்பட்ட இன்னொரு பெண் கவிஞர் கல்பனாவை அவர்  நினைவுபடுத்தினார்.  1990களில் பெண்களின் வாழ்க்கை எப்படியாக இருந்தது?  நவீனங்கள் பெண்களுக்கு சுதந்திரத்தைத் தந்ததா? அடையத்தான் விட்டார்களா?  குடும்பம்,  குழந்தை, கணவன்,  மாமனார், மாமியார் இத்தியாதி உறவுகளுக்கு,  கண், காது,  உடல் என  உறுப்புழைப்பு தானம் செய்த பின் இரவு ஒன்பது மணிக்கு மேல்  ஒரு தொலைபேசி அழைப்பு. மனம்விட்டுப் பேசுவதற்கும்  முடிகிறதா? பக்கத்திலேயே யாராவது நின்றுகொள்கிறார்கள்.

“தொலைபேசி அழைப்பு ஒலி கேட்டதும் ஏன் விழுந்தடித்து ஓடுகிறாள் யாரது தொலைபேசியில் இவளுக்கு  ஏன் இத்தனை  நண்பர்கள் இவ்வளவு நேரம் என்ன பேச்சு வேண்டி கிடக்கு” 

இப்படி யாரும் கேட்கவில்லை. ஆனால் கல்பனா கூறுகிறார்.  அருகில் நின்றவரின் முக பாவங்களை இப்படி நான் மொழிபெயர்த்துக் கொண்டேன்.    இதுதான்  30 ஆண்டுகளுக்கு முன் பெண்களின் நிலை.  இந்தக் கல்மேல் நின்று பார்க்கும் போதுதான் சதாரா மாலதி கவிதைகளின் ஆழமும் உட்பொருளும் புரியும். 

“இருக்கச் சொல்கிறார்கள் தோழியாக மனைவியாக மகளாக அவ்வப்போது உங்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆனால் அன்னையை மகள்போல் அடங்கச் சொல்லும்போது தோழியை மனைவியாக மாறச்             சொல்லும் போது மனைவியை எப்போதும் மன்னிக்கும் தெய்வமாக இருக்கச் சொல்லும் போது நாங்கள் பேய்கள்,  கிறுக்குகள் இருப்பதில்லை இப்படி”

-என ஆணாதிக்கத்தின் நெற்றிப்பொட்டில் அடிக்கும் சதாரா மாலதி,

“இருக்க விடுங்கள் நிர்பந்தம் என்மீது வேண்டாம் தாகமுண்டு எனக்கு அதற்காகக் கள்பானையைக் கொண்டு வந்து வைத்தால் யாருடைய கயமை அது”.

தாகத்திற்குத் தண்ணீர்தான் கொடுக்க வேண்டும். கள்ளினைக் கொடுக்கும் கயமையைப்  பலகோணங்களில் புரிந்துகொள்ளலாம்.  எனவே யாருக்கு எது தேவையோ அதைத் தருவதாகத்தான் யாவரும்  ( வீடாகவும் இருக்கலாம்; நாடாகவும்  இருக்கலாம் ) இருக்க வேண்டும் என்று தனது மன வேட்கையையும் மறவாமல் பதிவு செய்கிறார். “என்னிடம் நீங்கள் வாருங்கள்/  தண்ணீராய்”  சதாரா மாலதியின் சொற்கூட்டுகள் புதிய சிந்தனைகளை ஊற்றெடுக்கச் செய்கின்றன.   “ கல்யாணம் பண்ணிக் கொண்ட / காற்று உண்டா?/ தெருக்களுக்கு சொந்தமாக/  தென்றல் உண்டா”  என்று கேள்விகளை அடுக்கும் அவர் முத்தாய்ப்பாக இப்படிச் சொல்கிறார்.“ காற்று எழுதும் வரலாற்றை / மாற்ற முடியுமா?”

எந்தக் காற்று? தென்றலா,  புயலா? சூறையா? வாடையா ?  அனைத்துக்கும் மேலாக மூச்சுக்காற்றா என எண்ணங்களை ஓடவிடுவது சதாரா மால தியின் கவிதை  நடையாக இருக்கிறது.  “ நீ என் / பிச்சைப் பாத்திரத்தில் விழுந்த / வைரமாலை / விளிம்புகளில் வந்த வானவில் / யுக தீபம் / கருணைக்கடல் / என் நெற்றிப்பொட்டின் /  நேர் விளக்கம் / என் அன்பின் விரிவு நீ / அப்படியும் / உன்னுடன்தான் என் சச்சரவுகள்” என்பவை ‘நீயும் நானும்’ என்ற அவரது கவிதையின் சொற்கள்.  இதில் வருகின்ற சொற்களெல்லாம், தன்னுடைய உறவினரின் மேன்மையை எடுத்துச் சொல்பவை.  ஆனால் கணவன் மனைவி உறவு என்றாலும், காதலன் காதலி உறவு என்றாலும்,  எவ்வளவு மேன்மையாக  இருந்தாலும் இறுதியில் சர்ச்சைகள் உன்னோடுதான். ஏனென்றால் பெண்கள் தங்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை, அடக்கப்பட்ட குரலை, அழுத்தப்பட்ட உணர்வுகளை எங்கே போய் வெளிப்படுத்துவது? தமக்கு பரிச்சயமாக இருக்கிறவர்களோடு சர்ச்சை செய்து தான்  அதற்குத் தீர்வு காண வேண்டும் எனும்  உறவுச் சிக்கலை அழகாக இந்த வரிகளில் சுட்டிச் செல்கிறார். 

பிரம்மராஜன் தொகுத்துள்ள “ஒளவை மண்ணில் பெண்கவிஞர்கள்”  என்ற நூலில் நானும் என் கவிதையும் என்ற  சதாரா மாலதியின் கட்டுரை மிக முக்கியமானது. “உண்மையைச் சொல்ல வேண்டும் என்று தோன்றியபோது கவிதை எழுதத் தீர்மானித்தேன்”  என்று அவர் கூறுகிறார். அவருடைய கட்டுரை யில் மிக அதிகம் கவனிக்கத்தக்கது எதுவென்றால் “நான் எழுதாமல் போயி ருந்தால் என்னை நான் மன்னித்திருக்க மாட்டேன்” என்பதுதான்.  வாழ்க்கையின் உறவு குறித்த தேடல் அவரது  கவிதை களின் மொழி நடையாக இருக்கிறது இப்படிப்பட்ட கவிஞரைப் பேசுவது என்பது தமிழ்ச் சமூக நடுத்தர வர்க்கத்தின் பெண்களைப் பேசுவது என்று பொருள். 

தொகுப்பு: சிநேகா

;